articles

img

அபரிமிதமான ஆக்சிஜன் உற்பத்தி... ‘கேரளா மாடல்’ சாதித்தது எப்படி?

‘கேரளா மாடல்’ சாதித்தது எப்படி? 

ஓர் அலசல்

ஆ.பழனியப்பன்

தில்லி, உ.பி உள்ளிட்ட வட மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொத்துக் கொத்தாக மக்கள் செத்து மடிகிற துயர நிலையை  இந்தியா எதிர்கொண்டுவரும் சூழலில், ஆக்சிஜனை அபரிமிதமாக உற்பத்தி செய்து கேரளா சாதனை படைத்துவருகிறது. இது எப்படி  சாத்தியமானது? ‘சுனாமியைப் போல கொரோனா தாக்கிக் கொண்டிருக்கிறது’ என்று தில்லி உயர்நீதி மன்றம் மிகுந்த கவலையுடன் கூறியிருக்கிறது. ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு பல உயிர்கள் பலியாகக்கூடிய ஆபத்தான சூழல் நிலவிக் கொண்டிருக்கிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான வழக்கு விசாரணையின்போது, தில்லி அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மெஹ்ரா, “தில்லிக்கு  480 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கட்டாயம் தேவை. இல்லையென்றால், 24 மணி நேரத்தில் மாநி லத்தின் சுகாதார அமைப்பே உருக்குலைந்து விடும். பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லாமல் நோயாளிகளின் நிலைமை ஆபத்தான கட்டத்தில் இருக்கிறது. ஆக்சிஜன் கிடைக்காவிட்டால் மிகப்பெரிய பேரழிவுகள் நடக்கலாம்” என்று கூறியிருக்கிறார். ஆக்சிஜன் சிலிண்டர்களை எப்படியாவது வாங்க வேண்டும் என்று நோயாளிகளின் உறவினர்கள் அல்லாடிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆக்சிஜன் தட்டுப்பாடு இந்தியாவில் மிகப் பெரிய பிரச்சனையாக மாறியிருக்கும் சூழலில், ஆக்சிஜன் விலை பல மடங்கு உயர்ந்துவிட்டது. ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் பங்குகள் பங்குச்சந்தையில் கிடுகிடுவென உயர்ந்துள்ளன. ‘ஆக்சிஜன் ஏற்றிச்செல்லும் வாகனங்களை மறிக்கும் அதிகாரிகளை தூக்கில் போடுவோம்’ என்று தில்லி உயர்நீதி மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்தளவுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை இந்தியாவை ஆட்டிப்படைத்துவருகிறது. அமைச்சரின் கணிப்பு இப்படிப்பட்ட ஒரு மோசமான சூழலை வட மாநிலங்கள் எதிர்கொண்டுவரும் நேரத்தில், கேரளாவில் அபரிமிதமான அளவில்  ஆக்ஸிஜனை உற்பத்தி செய்துகொண்டிருக் கிறார்கள் என்கிற ஆச்சரியமான செய்தி வெளி யாகியிருக்கிறது. கேரளாவைப் பொறுத்தவரை யில், அந்த மாநிலம் நீண்ட காலமாகவே மருத்துவக் கட்டமைப்பிலும் சுகாதாரத்திலும் இந்தியாவில் முன்னணி மாநிலமாகத் திகழ்ந்துவருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவை நிபா வைரஸ் தாக்கியபோதும், அதைத் தொடர்ந்து கொரோனா பாதிப்புக்கு உள்ளானபோதும், அவற்றை பினராயி விஜயன் தலைமையிலான கேரள இடது முன்னணி அரசு எதிர்கொண்ட விதம் குறித்து உலக அளவில் பேசப்பட்டது. குறிப்பாக, கொரோனாவை கட்டுப் படுத்துவதற்கு கேரள அரசு எடுத்த நடவடிக்கை களை ‘கேரளா மாடல்’ என்று எல்லோரும் குறிப்பிட்டனர்.

ஒரு வியப்பான செய்தி என்னவென்றால், கொரோனா என்கிற பெயர் இந்தியாவில் பலரும் அறிந்திராத ஒரு சூழலில் கொரோனாவை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றிய ஆலோசனைகள் கேரளாவில் தொடங்கிவிட்டன. அதாவது, 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், சீனாவின் வூஹானில் கொரோனா என்றொரு புதிய வைரஸ் பரவுகிறது என்ற செய்தியை இணை யத்தில் கண்டிருக்கிறார் கேரளாவின் சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா டீச்சர். அவர்  ஓர் அறிவியல் ஆசிரியரும்கூட. வூஹானில் கேர ளாவைச் சேர்ந்த பல மாணவர்கள் மருத்துவம் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கு கொரோனா வைரஸ் பரவுவதால், அந்த மாண வர்கள் சொந்த ஊருக்குப் புறப்பட்டுவரு கிறார்கள். அவர்கள் மூலமாக கேரளாவுக்கு கொரோனா வர வாய்ப்பு இருக்கிறது என்று சைலஜா டீச்சர் கணித்திருக்கிறார். உடனடியாக அதிகாரிகளை அழைத்து ஆலோசித்து, தேவையான முன்னேற்பாடுகளை செய்திருக்கிறார். அவர் எதிர்பார்த்ததைப் போலவே வூஹானிலிருந்து மாணவர்கள் வர  ஆரம்பித்தனர். உடனடியாக அவர்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கேரளா அரசு மேற்கொண்டது. இப்படியாக கொரோனா விவகாரத்தில் ஒவ்வொன்றையும் முன்கூட்டியே ஆலோசித்து தேவையான திட்ட மிடல்களுடன் கொரோனாவை கேரளா எதிர்கொண்டது. ஏராளமானோர் கொரோனா வால் பாதிக்கப்பட்டபோதும், கேரளாவில் உயிரி ழப்புகள் என்பது மிக மிகக் குறைவு.

முன்கூட்டிய திட்டமிடலும் செயல்பாடும்

இதைப்போலவேதான், ஆக்சிஜன் உற்பத்தி யிலும் முன்கூட்டிய திட்டமிடலும் செயல்பாடும் இருந்ததால் இன்றைக்கு ஆக்சிஜனை உபரியாக உற்பத்தி செய்யும் ஒரே மாநிலமாக கேரளா திகழ்கிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 99.39 மெட்ரிக் டன் ஆக்சிஜனை கேரளா உற்பத்தி செய்தது. அடுத்த சில மாதங்களில் ஆக்சிஜன் தேவை அதிகரிக்கும் என்பதை முன்கூட்டிய உணர்ந்த பினராயி விஜயன் அரசு, ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பதற்கான அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தியது. கேரளா வின் தற்போதைய ஆக்சிஜன் தேவை 74.25 மெட்ரிக் டன். ஆனால், 219 மெட்ரிக் டன் ஆக்சி ஜனை தினமும் கேரளா தற்போது உற்பத்தி செய்துகொண்டிருக்கிறது. ஆக்சிஜன் உற்பத்தித் திறனை ஒரே ஆண்டில் இரண்டு மடங்குக்கு மேல் கேரளா அதிகரித்திருக்கிறது. அது மட்டுமல்ல, உ.பி., தில்லி, குஜராத், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லா மல், சாலைகளிலும் நடைபாதைகளிலும் ஆம்புலன்ஸ்களிலும் ரிக்ஷாக்களிலும் நோயாளி கள் பரிதாபமாகக் காத்துக்கிடக்கும் சூழலில், கேரளாவின் அரசு மருத்துவமனைகளில் 50 சதவிகித படுக்கைகள் காலியாக இருக்கின்றன. பினராயி விஜயன் அரசின் திட்டமிடலும் செயல்பாடும் மக்கள் மீதான அக்கறையும் வியக்க வைக்கிறது. தரமான மருத்துவம், தரமான மருத்துவக் கட்டமைப்பு, சிறப்பான சுகாதாரம் ஆகிய வற்றில் இந்திய அளவில் முதல் இரண்டு இடங் களைப் பிடிக்கும் மாநிலங்களாக தமிழ்நாடும் கேரளாவும் விளங்கிவருகின்றன. இவற்றுக்கு மிகப்பெரிய வரலாற்றுப் பின்னணியும் உண்டு. கேரளாவின் வியக்க வைக்கும் மருத்துவக் கட்டமைப்புகள் உருவான பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் விஜயசங்கரிடம் பேசினோம்.

கல்விக்கும் மருத்துவத்துக்கும் முக்கியத்துவம்

“கேரளா, தமிழ்நாடு ஆகிய இரண்டு கல்விக்கும் மருத்துவத்துக்கும் மிகுந்த முக்கி யத்துவம் கொடுக்கும் மாநிலங்கள். கல்வி, மருத்துவம், சுகாதாரம், தொழில் என பல துறைகளில் தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றத்தை ‘திராவிட மாடல்’ என்று பொருளாதார அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். நீதிக்கட்சி மற்றும் இங்கு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடையே ஏற்பட்டிருந்த ஒற்றுமை ஆகியவை தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கு அடிப்படைகளாக இருந்தன. இந்தப் பின்னணி யிலிருந்து அதிகாரத்துக்கு வந்தவர்களிடம், மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற உறுதிப்பாடு இருந்தது. சமூகநீதி என்கிற அடிப்படையில் அவர்கள் செயல்பட ஆரம்பித்த னர். அது, தமிழகத்தை இந்தளவுக்கு முன்னேற்றியிருக்கிறது. அதேபோல, கேரளாவில் 1957-ல் இ.எம்.எஸ் தலைமையில் இடது முன்னணி ஆட்சிக்கு வந்தது. அந்த ஆட்சி கலைக்கப்பட்டது. பிறகு, மீண்டும் 1967-ல் இ.எம்.எஸ் தலைமையில் ஆட்சிக்கு வந்தது. அந்த ஆட்சியாளர்கள் சோச லிசப் பார்வையிலிருந்து திட்டங்களை செயல் படுத்தினர். நிலச்சீர்திருத்தம் என்ற பெயரில் நிலங்களை மக்களுக்குப் பகிர்ந்து கொடுத்த னர். கல்வி மற்றும் பொதுமருத்துவக் கட்டமைப்பு களை உருவாக்கி, அவற்றை வலுப்படுத்தினர். பஞ்சாயத்து அமைப்புகளை உறுதிப்படுத்தினர். இவற்றில் இடது முன்னணி அரசுகள் தொடர்ச்சியாக கவனம் செலுத்திவந்துள்ளன. பொதுமருத்துவம், கல்வி போன்றவை இடது சாரிகளின் திட்டத்தில் எப்போதுமே இருந்துவரு கின்றன. இடதுசாரிகள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, திருவாங்கூர் சமஸ்தான காலத்தி லேயே மருத்துவக் கட்டமைப்பு கேரளாவில் உருவாகிவிட்டது. அதை இடதுசாரி அரசுகள் பலப்படுத்தின. கேரள மக்களிடம் அரசியல் விழிப்புணர்வு அதிகம். அந்த வகையில், மக்களிட மிருந்து வந்த அழுத்தமும் கேரளாவின் இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருந்திருக் கிறது. தற்போது கொரோனா இரண்டாவது அலை வருவதற்கு முன்பாக, தனக்கு கிடைத்த இடைவெளியைப் பயன்படுத்தி, கேரளாவின் மருத்துவக் கட்டமைப்புகளை பினராயி விஜயன் அரசு மேலும் வலுப்படுத்திக்கொண்டது. தன்  தேவையையும் தாண்டி அதிகளவில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறனையும் கேரளா நிறுவி யிருக்கிறது” என்றார் விஜயசங்கர்.

மக்களை நேசிக்கிற, அறிவியல் ரீதியாக சிந்திக்கிற...

இதுகுறித்து கேரளாவைச் சேர்ந்த பத்திரிகை யாளர் கே.ஏ.ஷாஜியிடம் பேசினோம். “திருவாங்கூர் சமஸ்தானம், கொச்சி சமஸ்தானம் காலத்தில் கேரளாவில் மருத்துவக் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன. அவை நன்றாகவும் இருந்தன. கேரளாவின் கல்வி மற்றும் மருத்துவ வளர்ச்சியில் கிறிஸ்தவ மிஷினரிகளின் பங்கும் முக்கியமானது. அவர்கள் பல மருத்துவமனைகளை உருவாக்கினர். அதைத் தொடர்ந்து இடதுசாரி இயக்கங்களின் பங்களிப்பு முக்கியமானது. இ.எம்.எஸ் தலைமையிலான இடது முன்னணி ஆட்சியில், ரஷ்யாவைப் போல இங்கும் மருத்துவ வசதிகளை உருவாக்கினர். கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி உருவாக்கப்பட்டது. அது, ஆசியாவிலேயே மிகப்பெரிய மருத்துவக் கல்லூரி. மேலும், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி, கோட்டயம் மருத்துவக் கல்லூரி உள்பட பல அரசு மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டன. மருத்துவம் மற்றும் சுகாதாரத்தின் மீது தனி கவனம் செலுத்தப்பட்டு, நிறைய முதலீடு களை அரசு செய்தது. ஒவ்வொரு கிராமத்திலும் ஆரம்ப சுகாதார மையங்கள் ஏற்படுத்தப் பட்டன. தற்போது, அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் போதுமான அளவுக்கு படுக்கைகள் உள்ளன. அரசு மருத்துவமனைகள் என்றால் சுத்தமாக இருக்காது என்று நினைத்து விட முடியாது. கேரளாவின் அரசு மருத்துவ மனைகளின் வார்டுகள் அவ்வளவு கிளீனாக இருக்கும்” என்று வியக்க வைக்கும் தகவல் களைத் தருகிறார் கே.ஏ.ஷாஜி. மக்களை நேசிக்கிற, அறிவியல் ரீதியாக  சிந்தித்தால் மட்டுமே எந்தவொரு அரசாங்கத்தா லும் இத்தகைய சாதனைகளை செய்ய முடியும் என்பது நிதர்சனம்.

நன்றி : விகடன் இணைய இதழ்
 

 

;